Wednesday 13 February 2013

முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் வாயடைத்து போனது யார்? கமலா? டிஎன்டிஜெவா?உண்மையை திரித்து பேட்டியளித்த கருங்காலி யார்?


முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது கமலஹாசன் என்னையும் என் குடும்பத்தையும் இழிவுபடுத்தி மேடை போட்டு பேசலாமா என்று கேட்டதாகவும், சம்பந்தப்பட்ட அமைப்பு இதற்கு பதில் சொல்ல முடியாமல் வாய் மூடிக்கொண்டதாகவும் ஒரு வார இதழில் எழுதப்பட்டுள்ளதே? இதன் உண்மை நிலை என்ன?

அஹ்சன், நாகை

கமலஹாசன் இக்கேள்வியை நமது நிர்வாகிகளிடம் கேட்டது உண்மை. தவ்ஹீத் ஜமாஅத் வாயடைத்துப் போனது என்பது பச்சைப் பொய். இவ்வாறு கமலஹாசன் கேட்டதற்கு மாநிலச் செயலாளர் யூசுஃப் தக்க பதில் கொடுத்தார்.

கமலஹாசன் தரப்பு முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கி கலாச்சாரத் தீவிரவாதம் என்று சொன்னதையும், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று சித்தரித்ததையும், திரைத்துறையினரை ஏவிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கைவிட்டதையும் சுட்டிக்காட்டி நீங்கள் நடந்து கொண்டதற்கு பதிலடிதான் கொடுத்தோம். குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடு என்று காட்டுவது சரிதான் என்று தொடர்ந்து வாதிட்டீர்கள். இதெல்லாம்தான் இதற்குக் காரணம் என்று தெளிவாக விளக்கினார்.

நாங்கள் உங்களது கன்னத்தில் அடித்ததற்காக, நீங்கள் பதிலுக்கு எங்களது கன்னத்தில் அடித்தால் பரவாயில்லை; அதற்காக எங்களது கழுத்தை அறுக்கலாமா? என்று கமல் அருகிலிருந்த அவரது அண்ணன் சந்திரஹாசன் நமது நிர்வாகிகளிடம் கேட்க, அதற்கு நீங்கள் எங்களது கழுத்தை அறுத்தது; உங்களுக்கு கன்னத்தில் அறைந்ததுபோலத் தெரிகின்றதா? என்று கேள்வியெழுப்ப கமலும் அவரது அண்ணன் சந்திரஹாசனும் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போயுள்ளனர். இதுதான் நடந்த உண்மை.

இந்தப் பேச்சு வார்த்தையின்போது மேற்படி இதழின் ஆசிரியர் அங்கே இருக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் 23 அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் அந்த இதழுக்கு இந்த உண்மையான தகவலுடன் பொய்யையும் கலந்து சொல்லியிருக்க முடியும். அந்த இதழுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் ஆகாது என்பது உலகத்துக்கே தெரியும். அப்படியானால் இல்லாதவைகளைக் கலந்து அந்த இதழுக்கு பொய்ச் செய்தி அளித்த கருங்காலி 23அமைப்பில் ஒருவராகத்தான் இருக்க முடியும். இப்படி பொய்யான தகவலைக் கொடுத்தது 23 இயக்கத்திலிருந்த ஒரு கருங்காலிதான் என்பதை 23 இயக்கத்தினரும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அந்த கருங்காலி யார் என்பதை அந்த இதழில் வெளியான செய்தியிலிருந்தே யூகித்து அறிந்து கொள்ளலாம். 23 இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க, ஒருவர் மட்டும் நீக்க வேண்டிய காட்சிகளை கமல்ஹாசனிடம் சொன்னதாக அந்த இதழ் புகழ்ந்து எழுதியுள்ளதே அவர் தான் அந்தக் கருங்காலி என்பதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு முன்னாள் 23 அமைப்புகளும் கமலஹாசன் வீட்டில் திரைப்படத்தைப் பார்த்தபோது, எல்லா இயக்கத்தினரும் கோபமாக வெளியே வந்தபின்னர், அந்த கருங்காலி மட்டும் மானம்கெட்டுப்போய் கமல்ஹாசனோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததாக சில தலைவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

மேலும் முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது கமலஹாசனை இந்தக் கருங்காலி எப்படியெல்லாம் ஐஸ் வைத்தார் என்பதை அறிந்தால் அது சமுதாயத்திற்கே அவமானமாகும். அதையெல்லாம் வெளியே சொன்னால் நாற்றமெடுத்துவிடும்.

அனைத்து தலைவர்களும் இப்படத்தில் நீக்கப்படவேண்டிய காட்சிகளை விளக்கினார்கள். ஆனால் ஜால்ரா தட்டிக்கொண்டிருந்த இவர் மட்டும் அந்த சபையில் வாதம் செய்ததாக அந்த இதழில் எழுதப்பட்டிருப்பதில் இருந்தே மேற்படியார்தான் இந்தப் பொய்க்குச் சொந்தக்காரர் என்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொண்டனர்.

கமலஹாசனின் அடுத்த படத்தின் வினியோக உரிமையைப் பெறுவதற்காக இந்தக் கருங்காலி கூழைக்கும்பிடு போட்டார் என்றோ, கமலஹாசனைப் பயன்படுத்தி திரைப்படத்தில் ஏதேனும் வாய்ப்பைப் பெறுவதற்காகவோ இப்படி அடிமைக்கும் கீழாக இறங்கி வந்து இருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம்.

கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதிகளில் இவர் இடம் பெற்றால் இனிமேல் எந்த ஒத்துழைப்பும் நாம் அளிக்கப்போவதில்லை என்பதை இதன் மூலம் கூட்டமைப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

துரோகம் செய்பவர்கள் விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொள்ளாவிட்டால் கூட்டமைப்புக்குத்தான் பாதிப்பு என்பதை சொல்லி வைக்கிறோம்.


13.02.2013. 01:05