Friday 23 August 2013

நாம் என்ன பரிசோதனை எலிகளா?பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டுகம்பளம் விரிக்கும் அரசாங்கம்


பல நேரங்களில் ஒரு மருந்தை எதற்காக தடை செய்கிறோம் என்பதிலும் தெளிவில்லை. மீண்டும் அத்தடையை எதற்காக நீக்குகிறோம் என்பதற்கும் வலுசேர்க்கும் காரணங்கள் சொல்லப்படுவதில்லை. அண்மையில் தடை செய்யப்பட்டு பின்னர் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட "பியோகிளைடசோன்' மருந்து இதற்கு ஒரு உதாரணம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுவந்த மாத்திரை "பியோகிளைடசோன்'. இதனை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என 18.6.2013 அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணை மூலம் தடைவிதித்தது மத்திய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணம், சில மருத்துவ இதழ்களில் இந்த மருந்தினால் பக்கவிளைவுகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு கூறியது.
தடை செய்து உத்தரவு வழங்கிய பின்னர், தடை செய்யப்பட்டுள்ள மருந்து தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றுதானா என்பதைக் கண்டறிய ஒரு வல்லுநர் குழுவை நியமிக்கிறார்கள். மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இந்த வல்லுநர் குழுவை அமைத்து அவர்களிடம் அறிக்கை கோருகிறது. "இந்தத் தடையை
நீக்கிவிடலாம்' என்று அவர்கள் பரிந்துரை செய்தவுடன், மத்திய அரசு 31.7.2013 அரசிதழில் "பியோகிளைடசோன்' மாத்திரை மீதான தடை விலக்கப்படுவதாக ஆணை வெளியிடுகிறது.
மருத்துவ இதழ்களில் வெளியான பின்விளைவுகள் பற்றிய செய்திகள் உண்மையாக இருந்தால், இந்தியாவில் அது குறித்து மருத்துவமனைகள் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உதவியோடு, மருந்தை உட்கொண்டு வரும் சர்க்கரை நோயாளிகள் அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தி, எவ்வளவு காலமாக அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணித்திருக்க வேண்டும். அதுதான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை. தடை விதிக்கும்போது வல்லுநர் குழுவைஅமைத்து, பரிந்துரை கேட்டு தடை விதிக்கவில்லை. தடையை நீக்கும்போதும் எந்த மருத்துவ ஆய்வுகள் குறித்தும், அல்லது இந்த மருந்தின் பின்விளைவுகள் குறித்தும் பேசவில்லை. வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று, தடையை நீக்கிவிடுகிறார்கள்.
பரிந்துரைக் குழுவின் ஆலோசனையை ஏற்று, அரசு ஒரு கடுமையான விதியை புகுத்துகிறதாம். அதாவது, மாத்திரையின் அட்டைபெட்டி மீது, ""டாக்டர்களின் கவனத்துக்கு - இந்த மருந்தை நோய் தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முதல் மருந்தாக பரிந்துரைக்காதீர்; 6 மாதங்களுக்குப் பிறகு நோயாளியை சோதித்துப் பார்த்து, பின்விளைவுகள் காணப்பட்டால் இந்த மருந்தைப் பரிந்துரைக்காதீர்கள்; சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள, அல்லது ஏற்கெனவே புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு பரிந்துரைக்காதீர்'' என்று எழுதி விற்பனை செய்யப்பட வேண்டுமாம்.
அதாவது, புகைபிடித்தல், மதுஅருந்துதல் ஆகியவை உடல்நலத்துக்குக் கேடு என்று சிகரெட் அட்டையின் மீது, மதுபாட்டில்கள் மீது அச்சிடுவதைப் போல, இந்த மருந்தின் தீமை குறித்தும் அட்டைப்பெட்டியில் அச்சிட்டால் போதுமானது. ஆனால் யார் இதைப் பொருட்படுத்தப்போகிறார்கள்?
உண்மையாகவே அரசுக்கு இந்த விவகாரத்தில் அக்கறை இருக்குமானால், அவர்கள் இந்த மருந்து பயன்படுத்தும் அனைத்து சர்க்கரை நோயாளிகளிடமும் "இதன் தீமைகளை அறிந்திருக்கிறேன்' என்று ஒப்புதல் கடிதம் பெற்று மாத்திரையை சாப்பிடுவதையும், 3 அல்லது 6 மாதங்களில், இதற்கென நியமிக்கப்படும் மருத்துவ அதிகாரியிடம் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதையும் கட்டாயமாக்கியிருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் மாத்திரை குறித்து அறிந்து கொள்வார்கள். இந்த மருந்தின் பக்கவிளைவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அரசுக்கு நேரடியாக கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லையே, ஏன்?
இந்தியாவில் தொற்றில்லா நோய்களில் மிகவும் அதிகமாகி வருவது இதயநோய் மற்றும் சர்க்கரை நோய். ஆயிரம் பேரில் 37 பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேரில் 62 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரு தினங்களுக்கு முன்பு, மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத், மக்களவையில் தெரிவித்த புள்ளிவிவரம். அப்படியிருக்கும்போது, இத்தகைய மாத்திரைகளை மீண்டும் அனுமதிக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?
அமெரிக்கா தனது உணவு மற்றும் மருந்து சட்டத்தை மேலும் இறுக்கி கடுமையாக்கிக் கொண்டிருக்கிற வேளையில், நாம் எளிமையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நுழையும் எந்த மருந்தையும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் (கிளினிக்கல் டிரையல்) அனுமதிக்க முடியாது என்று நம்மால் சொல்ல முடியவில்லையே, ஏன்?
பன்னாட்டு நிறுவனங்கள் பல புதிய மருந்துகளை இங்குள்ள இந்தியர்களுக்கு கொடுத்துதான் ஆய்வு செய்கின்றன. இதில் பல மருந்துகள் அரசாங்கத்துக்கு சொல்லப்படாமலேயே ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்தியர்கள் பரிசோதனை எலிகளாக்கப்படுகின்றனர். இதை இந்திய அரசு தெரிந்தே அனுமதிக்கிறது. இந்தியனாய்ப் பிறந்தது தவறு!
2010-ஆம் ஆண்டு 13 மருந்துகள், 2011-ல் 3, 2012-ல் 8, நிகழாண்டில் இதுவரை 2 மாத்திரைகள் கிளினிக்கல் டிரையல் (மருந்தக ஆய்வுகள்) இல்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொல்கிறார். யாருமே கேள்வி கேட்கவில்லை. இந்த மருந்துகள் எவை? எந்த நோய்க்களுக்கானது? இதன் பின்விளைவுகள் குறித்து நோயாளிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தின் கூச்சல் அமளியில் இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது