Tuesday 24 September 2013

சவூதி: பொது மன்னிப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியத் தூதர் வேண்டுகோள்!


சவூதி அரேபியாவில் சட்ட மீறலாகத் தங்கியோ, முறையான ஆவணங்கள் இன்றியோ பணி செய்துவரும் வெளிநாட்டவர்கள் எவ்வித தண்டனையோ, அபராதமோ இன்றி பொதுமன்னிப்பின் கீழ் தாயகம் திரும்பிட இன்னும் 45 நாள்களே மீதமுள்ள நிலையில், அவ்வாறான நிலையில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளும்படி சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர் ஹமீது அலீ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்

முதலில், நிபந்தனைகளற்ற பொதுமன்னிப்பை வழங்க முன்வந்ததுடன், மேலும் நான்கு மாதங்களுக்கு சலுகைக் காலத்தை நீட்டித்துத் தந்த சவூதி அரேபிய அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸுக்கு இந்தியத் தூதர் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

சவூதி மன்னர் அறிவித்திருந்த மூன்று மாத பொதுமன்னிப்புக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு இந்த அரபிய ஆண்டு(ஹிஜ்ரி 1434) இறுதிவரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அறிந்ததே

இதுவரை இந்த பொதுமன்னிப்பின் கீழ், இந்தியர்களில் 359,997 பேர் தங்கள் பணிகளை முறையான ஆவணங்களுடன் மாற்றிக்கொண்டுள்ளனர், 355,035 இந்தியர்கள் தங்கள் பணிப்பெயர்களில் முறையான திருத்தம் செய்துள்ளனர் என்றும், 466,689 பேர் உரிமங்களைப் புதுப்பித்துள்ளனர் என்றும் அவர் புள்ளிவிவரங்களை அளித்தார்.

 
மேலும் 88, 737 இந்தியர்கள் தாயகம் திரும்புவதன் பொருட்டு அவசரக் கடவுச் சான்று (Emergency Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்

இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் தேவையான மாற்றங்களைப் பெறுவதற்கோ, தாயகம் திரும்பவோ உதவியாக உள்ள சவூதி உள்துறை அதிகாரிகளுக்கும், பிரதிபலனை எதிர்பாராமல் சக இந்தியர்களின் நலனை உத்தேசித்து களப்பணி ஆற்றி துயர் துடைக்கும் இந்தியத் தன்னார்வ சமூக சேவகர்களுக்கும் இந்தியத் தூதர் தன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 
இந்தப் பொதுமன்னிப்பு பற்றி அறியாமல் இருக்கும் இந்தியர்களிடம் இச்செய்தியை எடுத்துரைக்கும்படியும் இந்தியத் தன்னார்வத் தொண்டர்களையும் ஊடகப் பிரதிநிதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்